நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.
சந்தேக நபர் நேற்று (23 ஏப்ரல்) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தி கத்தி உள்ளிட்ட சான்றுப்பொருள்கள் மீட்கப்படவேண்டும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெறவேண்டும் என்பதனால் ஒரு வாரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸாரின் அசமந்தத்தினால் சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டார்.
எனினும் புங்குடுதீவு இளைஞர்களின் முயற்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவான தமிழ் பொலிஸ் குழுவின் துரித முயற்சியினால் கொலைச் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்துக்குள் கொலையாளியை கைது செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் தமிழ் பொலிஸ் அதிகாரிகள், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னின்று துரித விசாரணைகளை முன்னெடுப்பதை பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்டம் வரவேற்பதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி பாராட்டினார்.
(நன்றி adaderana.com)