நெடுந்தீவில் இருந்து இன்று மதியம் (ஜூலை 17) பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நெடுந்தீவைச் சேர்ந்த நிறைமாத கற்பிணித் தாய் ஒருவரை அனுப்பிய வேளை அம்புலன்ஸ் படகிலேயே இன்று மதியம் 12.38 மணிக்கு சுகப் பிரசவம் இடம்பெற்றுள்ளது.
நிறைமாத கர்ப்பிணி தாய் என்பதனால் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும் போது அவருடன் மருத்துவ உதவிக்காக நெடுந்தீவு வைத்திய அதிகாரி, வெளிக்கள மருத்துவ மாது, மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் என்போர் உடன் சென்ற காரணத்தால் குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் கடற்படையினரின் பராமரிப்பில் உள்ள அம்புலன்ஸ் படகில் வைத்தே வெளிக்கள மருத்துவ மாதுவின் உதவியுடன் பிரசவம் இடம்பெற்றுள்ளது.
தாயும், சேயும் நலமாக உள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு நலமுடன் உள்ளதாக நெடுந்தீவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தரமாக மருத்துவ மாது நியமிக்கப்படாமையினாலேயே யாழ் நகருக்கு அனுப்பவேண்டிய நிலை காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.