இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பால்கே இன்று(நவம்பர் 30) மதியம் நெடுந்தீவுக்கான கள விஜயத்தினை மேற்கொண்டு இருந்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறப்பான வரவேற்பழிக்கப்பட்டு அவருடைய விஜயம் தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடல் இடம் பெற்றன.
இதன் போது இந்திய உயரஸ்தானிகரிடம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொள்ளவும், மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறு நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய உயரஸ்தானிகர் உறுதியழித்திருந்தார்.
தொடர்ந்து நெடுந்தீவில் வாழ்வாதாரம் நலிவுற்ற நிலையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் சுமார் 50 பேருக்கான உலர் உணவுப் பொருட்களும் இன்றைய தினம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை நெடுந்தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினை அமைத்தல் தொடர்பாக இந்திய தூதருடன் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளும் இணைந்து இடங்களை சென்று பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் நெடுந்தீவு மத்திய பகுதியில் அமைந்துள்ள புராதன சின்னங்கள் , மணற் கடற்கரை மற்றும் அரச அலுவலகங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டதுடன் பயணத்தினை நிறைவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.