நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்
நெடுந்தீவுப் பிரதேசத்தில் பல்வேறு உதவித்திட்டங்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளதுடன் தற்போதும் கொரோனா நெருக்கடியினை கருத்தில் கொண்டு பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்.மாவட்ட பொருளாளரும் நெடுந்தீவு கிளைத் தலைவருமான எட்வேட் அருந்தவசீலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்ட செஞ்சிலுவைச் சங்கமும் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க கிளையும் இணைந்து குறித்த உதவித்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
யாழ். புரவிப் புயலால் பாதிக்கப்பட்ட 1300 பேருக்கு 10000 ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் நெடுந்தீவில் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு 10000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் 105 கிணறுகள் தூர்வாரி இறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவுப் பிரதேசத்தில் உள்ள சகல மகப்பேற்று தாய்மார்களுக்கான மகப்பேற்று பொருட்களும் குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை தற்போதய கொரோனா நெருக்கடியினை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட 94 குடும்பங்களுக்கு உணவற்ற பொருட்களும் தொழில் வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட 43 குடும்பங்களுக்கு 10,000.00 ரூபா வீதம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
அண்மையில் மருத்துவ முகாம் ஒன்றினை மிக சிறப்பாக மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கூடாக சில நோயளர்கள் நெடுந்தீவில் அடையாளம் காணப்பட்டு தொடர்சியாக சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெடுந்தீவுப் பிரதேச பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, பிரதேச செயலகம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களை மருத்துவிசிறி தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் பல்வேறு அமைப்புக்கள் காணப்படும் நிலையில் கொரோனா நெருக்கடி மற்றும் இடர் காலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே தொடர்ச்சியான சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.