தபால் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று கையொப்பமிடப்பட்டது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தினர் நேற்றுப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுவரெலியாவில் உள்ள பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவே இந்தப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்ட அறிவிப்பின் பின்னர் நேற்றுமுன்தினம் தபால் திணைக்கள ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் தபால் மா அதிபரால் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதும் நேற்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியிலேயே தபால் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
’இந்தப் பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றது. தபால் திணைக்களம் நட்டத்தில் சேவைகளை வழங்குகின்றது.
தனியார் மயப்படுத்தப்படாமல் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு வருவாயை அதிகரிப்பதற்கு மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் ’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.