குமுதினிப் படகு பயணிப்பதற்கான பரிசோதனைகள் முடிவடைந்து இன்று(ஜூலை 19) வல்வெட்டித்துறையில் இருந்து கடல் வழியாக காரைநகர் துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
அங்கு துறைமுகத்தில் வைத்து அதற்கான மின் இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு குறித்த தினத்தில் பயணிகள் சேவையை ஆரம்பிக்கும் என தெரிய வருகிறது.
இதேவேளை திருத்தம் செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை நேற்று வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன் என்பவரால் மீள்திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில், கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனைப் பயணம் இடம்பெற்றுள்ளது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.