சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பில் தேசியமட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
சமுர்த்தி தேசிய சம்மேளனம் – 2023 மற்றும் மக்கள் பாராட்டு (பிரஜா ஹரசர) தேசிய விருது வழங்கும் விழா கடந்த 25 ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் மு.ப 8.30 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது.
இவ் விழாவில் புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பில் மக்கள் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் , சிறந்த சமுர்த்தி சமுதாய அமைப்பின் மக்கள் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநூப பஸ்குவெல் அவர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பில் தேசிய மட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. அதற்கான கேடயத்தினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் சார்பில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அநூப பஸ்குவெல் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவு 02ம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் மல்லாகம் சமுர்த்தி வங்கி வலயம் 01வது இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘இளைஞர்களுக்கான அழகான ஒரு செய்தி’ எனும் மகுடத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற கரவெட்டி பிரதேச அமைப்பின் அணியின் தலைவர் மற்றும் மாவட்ட மட்டத்தில் சிறந்த தொழில் முயற்சியாளர்களும் பாராட்டப்பட்டனர். அத்துடன் சிறந்த சமுர்த்தி பிரதேச அமைப்புகளான யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை என்பனவும் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.