ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மட்டுமே உண்மையான கொள்கை இருக்கின்றது, ஏனைய தமிழ் கட்சிகளுக்கு வெறும் புலம்பல்களே உள்ளது, அவர்களிடம் கொள்கை எதுவும் இல்லை. நல்ல தமிழ் தேசியத்தையும் முன்னெடுத்து செல்கின்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே என்று கட்சியின் செயலாளர் நாயகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் உள்ள டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 03) ஊடகவியலாளர்களை சந்திக்கும் போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “எமது நீண்டகால முயற்சியின் விளைவாகவே காணி விடுவிப்புகள் நடைபெற்றுள்ளன, அண்மையில் பலாலி – அச்சுவேலி வீதியும் திறக்கப்பட்டது. குறித்த வீதி கடந்த ஆட்சியில் விடுவிக்கப்படவிருந்தபோதும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் காரணமாக அது சாத்தியமாகவில்லை. தற்போது அந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்தேன். அப்போது வடக்கில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேசி, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் தொடர்பான ஆக்கிரமிப்புகள் குறித்து விவாதித்தேன். ஜனாதிபதி கூறினார், “நீங்கள் வடக்கில் உள்ள பிரச்சினைகளை நன்றாக அறிந்தவராக இருக்கிறீர்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதை தீர்க்க முடிவு செய்வோம்” என்று.
மேலும், நான் ஜனாதிபதியை சந்தித்த போது 38 கோரிக்கைகளை முன்வைத்தேன். ஆனால் சிலர் சென்று மதுபான சாலைக்கான அனுமதி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கோரியதும், மற்ற சிலர் அதை மறைத்து விட வேண்டும் எனக் கோரியவுமே ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மட்டுமே திடமான கொள்கை இருக்கின்றது. 1990 முதல், மத்தியத்தில் கூட்டாட்சி மற்றும் மாநிலத்தில் சுயாட்சி என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது. ஆனால் அப்போதே பல அரசியல் கட்சிகளும், போராட்ட இயக்கங்களும் அதை ஏற்க மறுத்தனர். ‘13ஆவது திருத்தத்தை தும்பு தடியால் கூட தொட மாட்டோம்’ எனக் கூறியவர்கள், மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் போட்டியிட்டு, தமிழ் மக்களை தூண்டி மாகாண சபை ஆட்சி அமைத்தனர்.
பின்னர், மாகாண சபையில் எதுவும் செய்யாமல், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ‘அவர் கள்ளர், இவர் கள்ளர்’ என்று கருத்து விலகினார்கள்.
தமிழர்களின் பிரச்சனை சோறா, சுதந்திரமா என்றால், எங்களுக்கு இரண்டுமே முக்கியம். சோறும், சுதந்திரமும் வேண்டியது தான்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அதற்குத் தேவையான காலத்திலேயே நடைமுறைப்படுத்தியிருந்தால், தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்க நேர்ந்திருக்காது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். மக்கள் எங்களது கொள்கைகளுக்காகவே எங்களை ஆதரிக்கிறார்கள். ஈ.பி.டி.பி மீதான பயத்தினால் தான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர்.
எங்கள் கட்சியின் பார்வையில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன: அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள், அபிவிருத்தி, மற்றும் அரசியல் தீர்வு. இவை மூன்றும் எங்களுக்கு முக்கியம்.
ஜே.வி.பி. போராட்டம் வழியாக இடதுசாரி பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள். அதுபோல, ஈ.பி.டி.பி.யும் இடதுசாரி பின்னணியில் இருந்து வந்ததே.
நாங்கள் இம்முறை தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில் கொழும்பு, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில் ஆட்சியில் பங்கெடுப்பதா இல்லையா என்பதையும் முடிவு செய்ய இருக்கிறோம்.
நாங்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். எமது நிலைப்பாடு ‘குட் கொலஸ்ட்ரோல்’ என்றும், மற்ற கட்சிகளின் தமிழ் தேசியம் ‘பேட் கொலஸ்ட்ரோல்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.”