தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவைக்கு இந்திய மத்திய நீர்வழிப் போக்குவரத்து அமைச்சு அனுமதி மறுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் இந்தச் சேவையை நேரடியாக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இரு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் சேவையை மேற்கொள்ள தமிழக கடல்சார் வாரியம் தீர்மானித்திருந்தது. தமிழக சட்டசபையில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை இது தொடர்பான அறிவித்தலை விடுத்திருந்தது.
இந்தத் திட்டத்தை அடுத்து ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செயற்படுத்த வேண்டும். அதற்காக இராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் கப்பல் அணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்கம் மற்றும் குடியுரிமைப் பிரிவு சோதனை மையங்களை அமைக்க இந்திய மத்திய நீர் வழிப் போக்குவரத்து அமைச்சிடம் தமிழக கடல்சார் வாரியம் அனுமதி கோரியிருந்தது.
ஆனால் அதற்கான அனுமதி இந்திய மத்திய நீர் வழிப் போக்குவரத்து அமைச்சால் மறுக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறாமல் இந்தத் திட்டத்தை அறிவித்ததுதான் அதற்குக் காரணம் என்று அந்த நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் திட்டத்துக்கான அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டால், தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான போக்குவரத்து எளிதாகும் என்பதோடு, பயணச் செலவும் மிகக் குறைவாக இருக்கும். இதனால் குறித்த கப்பல் சேவையை வடக்கு மக்கள் இந்தக் கப்பல் சேவை எப்போது தொடங்கும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய மத்திய அரசின் தடைச் செய்து வெளியாகியுள்ளது.