அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளக் கட்டமைப்பு மற்றும் நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் பற்றிய பிரதேச செயலக ரீதியான தொழிற்சங்க கூட்டம் ஒன்று அட்டாளைச் சேனை பிரதேச செயலகத்தில் இன்று(ஓகஸ்ட் 7) இடம்பெற்றதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே. எம். கபீர் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு தேசிய இணைந்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முன்சிங்க வருகை தந்ததுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
எதிர்வரும் வாரங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய சம்பளக் கட்டமைப்பை எம் என் 5 ஆக மாற்றுதல் மற்றும் நீண்ட கால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாகத் தேசிய ரீதியில் பல்வேறுபட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தேசிய இணைந்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் தம்மிக முனசிங்க இதன்போது தெரிவித்தார்.
மேலும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களில் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இனமத மொழி வேறுபாடின்றி ஒட்டுமொத்தப் பங்களிப்பை வழங்கி, தொழில் சார் உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாக அம்பாறை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்தார்.