தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
2017 இல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2019 இல் 4.10 லட்சம், 2020 இல் 6 லட்சம், 2021 இல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஒளிவீசி கின்னஸ் சாதனை படைத்தன.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் விளக்குகள் எரியவேண்டும் என்ற நிபந்தனை காரணமாக, 15,76,955 விளக்குகள் மட்டுமே கின்னஸ் சாதனையில் பதிவு செய்யப்பட்டன.
தீபோற்சவ விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 54 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கி உள்ளது.
கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்ட பதினெட்டு ஊர்திகளின் ஊர்வலம் நடைபெற்றது. உத்தர பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் இந்த ஊர்வலத்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். உதயா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று ராம் கதா பூங்காவை அடைந்தது.