வடபகுதியில் தினமும் போக்குவரத்துக்களில் பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பிரதேசங்களாக தீவகப்பகுதிகள் காணப்படுகின்றன.
அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்குபகுதியில் அமைந்துள்ள சப்ததீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் தினமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக அல்லது ஆபத்தான பயணங்களாகவே காணப்படுகின்றன.
இதிலும் எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றுக்கான போக்குவரத்துக்கள் அன்று தொடக்கம் இன்று வரை பாரிய சவாலாகவே காணப்படுகின்றன.
அதாவது ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள அனலைதீவின் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் எழுவைதீவில் உள்ள ஒரு கிராம அலுவலர் பிரிவிலும் வாழும் சுமார் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நன்மை கருதி எழுதாரகை என்ற பயணிகள் போக்குவரத்து படகு கடந்த 2017 ஆம் ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதும் அந்த சேவை இப்போது மாதக்கணக்கில் கைவிடப்பட்டுள்ளது.
அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய இருதீவுகளில் வாழும் மக்களின் நன்மை கருதியும் அவர்களது அடிப்படைத் தேவைகளை கருதியும் தேவைகளை தீர்க்கும் வகையிலும் தீவக மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து, சுமார் 137 மில்லியன்ரூபா செலவில் நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட எழுதாரகை பயணிகள் படகு சேவயில் ஈடுபடுத்தப்பட்டது.
அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய இரு தீவுகளையும் யாழ் நகரையும் இணைக்கும் வகையிலும் தீவக மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுவாக்கும் வகையிலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மீள்குடியேற்ற அமைச்சின் சுமார் 137 மில்லியன் ரூபா செலவில் 40 பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய இருக்கைகளை கொண்டதும் 100 வரையான பயணிகள் பயணிக்கக்கூடிய விசாலமான பரப்பையும் மூன்று தொன் பொருட்களையும் ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லக்கூடிய வகையில் டொக்ஜாட் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து சேவையில் ஈடுபட்ட குறித்த படகு சேவை தற்போது மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டு எழுதாரகை அனலைதீவு இறங்குதுறையில் தரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் எந்தவித போக்குவரத்துச் சேவைகளிலும் ஈடுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளமையால் இந்த தீவுகளில் உள்ள மக்கள் நீண்ட கடல் பயணங்களை பாதுகாப்பற்ற சிறிய படகுகளிலும் தனியார் படகுகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு பாரிய நிதியில் நிர்மாணிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இந்தப்படகு சேவை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சுமார் நான்கு மாதங்களாக எந்த பதிலும் இன்றி எழுதாரகை இறங்குதுறையிலேயே தரித்து நிற்கின்றது.
இதனை சேவையில் ஈடுபடுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீவக மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில் குறித்த படகு சேவையை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. அதாவது இதற்கான எரிபொருள் செலவுகள் இதர செலவுகள் அதிகளவிலே காணப்படுகின்றமையே காரணமாகும். அதாவது நாள் ஒன்றுக்கு எரிபொருள் செலவிற்கு முப்பதாயிரம் ரூபாவும் சேவைக்காக அமர்த்தப்பட்ட ஐந்து பணியாளர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வந்ததாகவும் மேற்படி படகு சேவைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபா வரையிலேயே வருமானமாக கிடைத்த தாகவும் இதனால் குறித்த சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அனலைதீவு, எழுவைதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள் ஒரு வைத்திய சேவையோ அல்லது அத்தியாவசியத்தேவையோ எதுவானாலும் தீவிலிருந்து படகு மூலம் ஊர்காவற்றுறைக்கு வந்து அதிலிருந்து தரை வழியாக யாழ் நகருக்கு சென்று சேவை பெற்ற பின்னர் படகு மூலமே திரும்பிச்செல்ல வேண்டும். ஒரு நாள் பயணம் என்பது புதியவர்களுக்கு சவாலாகவே அமைந்துள்ளது. ஆனால் தினமும் இந்த தீவு மக்கள் போக்குவரத்துக்களில் படும் பாரிய கஷ்டத்தை தீர்க்க எழுதாரகை உதவியாக இருக்கும் என நம்பிய போதும் அது இன்று இறங்குதுறையிலிருந்து விடப்பட்டிருப்பதும் இவ்வளவு பாரிய நிதிமூலத்தை பயன்படுத்தாமல் விட்டிருப்பது என்பதும் மக்களின் வாழ்வில் அல்லது அபிவிருத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
இந்த மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுவாக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இவ் எழுதாரகை சேவையில் ஈடுபடுத்தப் படவேண்டும்.