கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து நடத்தவுள்ள பயணிகள் படகு சேவை தொடர்பான முன்னாய்வு கலந்துரையாடல் இன்று (மார்ச் 10) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வேலணை பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டிய படகு சேவையின் நேர அட்டவணை, பயணிகள் எண்ணிக்கை, மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், வேலணை பிரதேச செயலக நிர்வாக அதிகாரிகள், தீவகப் பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் நயினாதீவு, ஊர்காவற்றுறை பகுதிகளிலுள்ள படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.