வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்ல ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்வதா என்பதைத் தீர்மானிப்பதற்கு இரு வாரங்கள் தமது திணைக்களத்துக்கு கால அவகாசம் தேவை என சட்டமா திணைக்களத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் கோரியநிலையில், நீதிமன்றம் இரு வாரம் கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.
தமிழ் மக்களின் புராதன வழிபாட்டுத் தலமான வவுனியா, நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் உரிமைகோரப்பட்டுள்ளது. அதையடுத்து அந்தப் பகுதிக்கு வழிபாட்டுக்குச் செல்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றது.
பின்னர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்றும், அங்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மலையில் ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்த நிலையில், புதிய ஏணியைப் பொருத்துவற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புதிய ஏணி பொருத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொலிஸார் பணித்திருந்தனர்.
புதிய ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பாக மூவர் மீது பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் இந்தவழக்கைத் தொடர்வதா , இல்லையா என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதையடுத்து நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது.