வவுனியா சிறைச்சாலையில் தட்டம்மை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 04 கைதிகள் அடையாளம் காணப்பட்டமையினால், வவுனியா சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் சிறைக்கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வழக்கு செயற்பாடுகளுக்காக கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 08 ஆம் திகதி வரை சிறைச்சாலை மூடப்பட்டிருக்கும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் 400 இற்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.