கிளிநொச்சி மாவட்டத்தில் வனஉயிரிகள் மற்றும் வனவளத் திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விவரங்கள் தவறு என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டு திணைக்களங்களிலிருந்தும் விடுவிக்கப்படவேண்டிய காணிகளின் விவரங்கள் நேற்றைய கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களால் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் 1985 ஆம் ஆண்டு குடியிருப்பு மற்றும் விவசாயம் முன்னெடுக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஆனால் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவரங்களை அதற்குரியவாறு இல்லை. எனவே இதனை திருத்தியமைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் தவறானவை என்று குறிப்பிட்டு அதனைப் பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்தார். திருத்தியமைக்கப்பட்ட பின்னர் இதனை அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.