வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலயத்திற்கு ஒரு பாடசாலை என்ற நிகழ்வின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (மார்ச் 23) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தச் செயற்பாட்டின் அங்கமாக முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் மாணவர்களுக்கான இலவச சீருடை , இலவச பாடநூல்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடநூல்களை வழங்கினார்.
துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சா.பிரதிவாணன், பாடசாலை அதிபர் கோகுலன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.