வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப்பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த தாவது:-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வவுனியாவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாகப் பதிவாகியுள்ளது-என்றார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் அ.உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கில் எந்தவொரு பாடசாலையும் நிரந்தர மாக மூடப்படவில்லை. வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கூறிய 103 பாடசாலைகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. மாணவர் பற்றாக்குறை காரணமாகவே இவை மூடப்பட்டுள்ளன. இதற்கு இடப்பெயர்வுகள், நகர்ப்புற பாடசாலைகளின் வளர்ச்சி, நகரமயமாக்கல், சனத் தொகைப் பற்றாக்குறை எனப் பல காரணங்கள் காணப்படுகின்றன.
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் இன்று சில பாடசாலைகளில் புதிதாகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. மறுபுறம் சில பாடசாலைகள் மூடப்படுகின்றன. நகர்ப்புற பாடசாலைகளின் வளர்ச்சியும் இதற்குக் காரணம்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சில இடங்களில் மக்கள் இல்லை. சில இடங்களில் நகரமயமாக்கல் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. இது குறித்து நாம் அவதானம் செலுத்துகின்றோம். முறைப்படியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எமது தரப்பில் நாமும் முன்னெடுப்ப தற்குத் தயாராக உள்ளோம். தற்காலிகமாகப் பாடசாலைகளை மூடுவது எமது விருப்பு அல்ல. போதிய எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தருவார்களாயின் நிச்சயமாக பாடசாலைகள் மீள ஆரம்பமாகும்-என்றார். (நனறி ஈழநாடு)