புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு நன்றி தெரிவி்த்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
கடந்த 12 ஆம் திகதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்ளுள் சிலர், யாழ் இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போது ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
யாழ். இந்திய துணைத் தூதராலயத்தில் நேற்று(15/12) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் போது ….
இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் செயற்பட்டிருந்ததுடன், இந்தியாவிடம் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பெற்று, போரினால் அழிவடைந்த பிரதேசங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கட்டியெழுப்பியமையை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தினை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ஈ.பி.டி.பி. தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.
அதேபோன்று, கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. அரசாங்கங்களில் பங்கெடுத்து செயற்பட்ட வேளையிலும், இந்தியாவுடனான உறவுகளைப் பேணுவதிலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் செயற்படுவதிலும் கவனம் செலுத்தியமையை பல்வேறு உதாரணங்களுடன் ஈ.பி.டி.பி.பிரதிநிதிகளினால் சுட்டிகாட்ட்பட்டது.
பூகோள அரசியல் விவகாரத்தில் இந்தியாவே எமது முதல் தெரிவு என்று செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வந்ததுடன், செயற்பாடுகளிலும் அந்த நிலைப்பாட்டினை இறுக்கமாக பின்பற்றி வருவதாகவும், குறிப்பாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட கடலட்டை பண்ணை விஸ்தரிப்பின் போதும் இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கரிசனையுடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள அண்மைய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக இந்தியாவின் விரைவான மீட்புச் செயற்பாடுகளே, குறித்த விவகாரம் சர்வதேச ரீதியான பேசுபொருளாக மாறி பல்வேறு நாடுகளின் உதவிகளும் கிடைப்பதற்கு மூலகாரணமாக இருக்கின்றது என்ற விடயமும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. சார்பில், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான எஸ்.தவராசா, கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும் பேச்சாளருமான சிறீரங்கேஸ்ரன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக ஈ.பி.டி.பி இன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

