முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று(ஒக்ரோபர் 19) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள், அறநெறிக்கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாககாவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவி செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்,பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர்கள், உளநலவளத்துறை உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.