முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமங்களான கொக்குதொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணிப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பலரது தென்னந்தோட்டங்கள் நாசமாகியுள்ளன.
காட்டு யானைகளின் அட்டகாசத்தைத் தடுத்து, தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி அந்தக் கிராம மக்கள் நேற்று(ஒக்ரோபர் 18) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.
கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொடர்ச்சியாக காட்டு யானைகள் அப் பகுதியிலுள்ள தென்னந்தோட்டங்களுக்குள் கூட்டம் கூட்டமாக புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தப் பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழிவடைந்துள்ளன. அத்தோடு 6 ஏக்கரில் பயிரிடப்பட்ட கச்சான், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட மாதுளை செய்கை என்பன முற்றாக அழிவடைந்துள்ளன.
யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட் டுள்ளனர்.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குளாய் விவசாய போதனாசிரியர் தனபாலசிங்கம் துளசிராம், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் போன்றோர் நேற்று அங்கு நேரில் சென்று பாதிப்படைந்த இடங்களைப் பார்வையிட்டனர். மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.