2025 பெப்ரவரி மாத ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளியானயே. கிறித்துறாஜாவின் ‘ம(னி)தனின் கணக்கு‘ சிறுகதை
ம(னி)தனின் கணக்கு
காத்திருப்பு நிலையத்தினுள் அமர்ந்திருந்தவாறே வெளியில் நிற்கும் பொலிஸார் வாகனத்தையும் அதற்குள் இருக்கும் பொலிஸ் அதிகாரியையும் தனது சிவந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான், மதன். தனது நிலைமையினைச்சாதகமாகப் பயன்படுத்தி தன்னிடமே சுரண்ட நினைத்தவர்களை, தனது விட்டுக்கொடுக்காத மனதால் வென்றவனாக இருந்தாலும் இன்றைய பயணம் தந்திருக்கும் சிக்கல்களை எண்ணிவேதனைப்பட்டான், அவன்.
முதல் படகில் சென்றுவிடலாம் என்றஎதிர்பார்ப்புடன் பேரூந்திலிருந்து வேகமாக இறங்கியிருந்தாலும் நூறுபேருக்கு பின்னரே வரிசையில் இடம் கிடைத்தது. முதல் படகில் போறதுக்கு முட்டிமுரண்டு அனைவரும் போகும் போது பின்னுக்கு அகப்பட்டுக்கொண்ட இவனால் ஏதும் செய்து கொள்ள முடியவில்லை. பின்பக்கத்தால் ஓடிச்சென்று, தன்னிடம் அடிக்கடி பொருள் வாங்கிச் செல்லும் பொலிஸாரைச் சந்தித்துவிடயத்தைக் கூறி உதவிசெய்யும்படி கேட்டான். அதற்கு பொலிஸ்காரன் கேட்ட கூலி இன்றைய பயணச் செலவைவிட அதிகமானதால் நீங்களும் வேண்டாம், உங்கள் உதவியும் வேண்டாம் எனக்கூறி திரும்பி வந்து வரிசையின் இடையில் புகுந்து கொண்டான்.
வடதாரகைப் படகில் ஏறியவர்களின் தொகை சரியாக நூறாகவே,
“சீயதெனெக்னெகபு நிசா வோட்டெக்க பிரிலா. ஓகே யன்னபே, ஒய பேனவனே, அனித் வோட்டெக்க எனகம் இன்ன”
என்றபடி செல்லும் வழியை அடைத்தனர், கடற்படையினர். அவர்கள் சொல்லுகின்ற மொழி விளங்கவில்லை என்றாலும் நடக்கின்ற விடயங்களைக்கொண்டு நிலைமையைப்புரிந்து கொண்டனர், மக்கள். மதனும் அதனை விளங்கிக்கொண்டவனக சென்று அமர்ந்து கொண்டான். அடுத்த படகுபுறப்படும் வரையும் இங்கேயே காத்திருக்க வேண்டியநிலை ஐம்பது பேருடன் சேர்த்து மதனுக்கும் ஏற்பட்டுவிட்டது. அவன் சோர்ந்து அமர்ந்துகொண்டான். எனினும் அவனதுகண்கள் சோரவில்லை.
“ஒரு உதவிதானே கேட்டன். அதிகாரமுள்ளனீங்க அவசரத்துக்கு உதவுவேன் என்று கேட்டா எங்கிட்டயேபேரம்பேசுறிங்க” என்று தனக்குள் தானே பொலிஸாரைத்திட்டிக்கொண்டான்.
கடலலைகளைக் கிழித்துக்கொண்டு வடதாரகைப் படகு பயணப்பாதையின் அரைவாசிக்குச் சென்றுவிட்டது. துறைமுகக்காத்திருப்பு நிலையத்தில் இருப்பவர்கள் ஒருவர் மாறி ஒருவர் குசுகுசுத்தபடியே இருந்தனர். அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. துறைமுகத்திற்கு வந்து ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகவும் காத்திருக்கின்ற கடினமான மனநிலையை அடைந்திருக்கின்றனர் அனைவரும். அடுத்த கட்டநடவடிக்கைகளும் ஆயத்தப்பாடுகளும் ஒருபக்கம் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. எரிபொருள் கொள்கலனோடு ஒருவர், அதைசரியாக ஊற்றுகின்றாரா என்று பார்க்க இன்னொருவர் என துறைமுகத்தில் துரிதவேலை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. காத்திருப்பு நிலையத்தில் இருப்பவர்கள் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீண் ஊர்க்கதைகள் அங்கு இடம்பெறவில்லை. எனினும், தவறவிட்டபடகினையும் செல்ல வேண்டிய படகினையும் பற்றி தாறுமாறா கப்பல் கதைகள் இடம்பெறாமலுமில்லை.
மத்தியில் நடந்த கலியாண வீட்டிற்கும் மேற்கில் நடந்த பூப்புனித நீராட்டுவிழாவுக்குமாக வந்திருந்த சனம் முழுவதும் துறைமுகக் கட்டடத்தை நிறைத்து நின்றனர்.
“இதானப்பா ஊருக்கு வாற இல்ல, வாறதிலயும் போறதிலயுமேமனுசன் படாதபாடுபட வேண்டிக்கிடக்கு” முல்லை மணியின் ஆதங்கம் இப்படியிருந்தது.
“இவக நேவிக்காறர் எல்லாம் தங்கட இஸ்ரப்படிதான் செய்வினம். சில வேளை நூறு சனத்துக்கும் அதிகமா ஏத்துவினம். சில வேள இப்பிடி மறிச்சுப்போடுவினம். இதேதங்கள இனஞ்சனம் எண்டவுடன எப்பிடியாச்சும் சமாளிச்சு ஏத்தி அனுப்பிப்போடுவினம். இஞ்ச பிறந்தது பிழயா இல்ல இப்பிடிப் பிறந்தது பிழயா எண்டுதான் தெரியல” என்றுதன் கருத்தையும் சேர்த்துக்கொண்டாள், அகிலாண்டேஸ்வரி.
“மழையெண்டாலும், மலையடிக் காத்தெண்டாலும், நனையாமப் போகக்கூடிய படகில வசதியானவங்களும், போறபோக்கிலேயே தண்ணிய வாரி வைக்கிற இந்த சமுத்திரதேவாவில் நம்மளப்போல சனங்களும் போறது எவ்வளவு காலம் நீடிக்குமோ?” இப்படி தனது ஆதங்கத்தைப் பேசினார் வன்னிச்சண்முகம்.
“இந்த வள்ளம் எப்ப வெளிக்கிட்டு நாம எப்பபோய் வீடு வளவசேர்றதோ” என்றபடி சலித்துக்கொண்டான், மாங்குள மருதன்.
இப்படியாக சனங்கள் தங்கள் தங்கள் பிரச்சினைகளைப்பேசிக்கொண்டிருக்கின்றனர். என்னதான் ன நாடென்றாலும் ஊரப்போல வருமா? என்னதான் ஊரென்றாலும் வீட்டப்போலவருமா? என்ற வார்த்தைகள் இவர்களுக்கும் பொருந்தும் தானே.
ஏனையவர்களும் தங்கள் அருகில் இருப்பவர்களுடன் கதைகளைத்தொடர்ந்தனர்.
தற்போது வரிசையில் பத்தாவதாக அமர்ந்திருந்தான் மதன். வெள்ளைமேற்சட்டை, கறுத்த நீளக்காற்சட்டை எனவழமைக்கு மாறாகக் கோலம்பூண்டிருந்தான் இன்று முதலாவதுவழக்கு நாள். சரியாக 9.30க்குவந்துவிடுவேன். அந்த நேரமேவழக்கை நடத்தித்தருமாறு கேட்டு முற்பணமும்கட்டிசட்டத்தரணியுடனான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டநிலையில்இன்றைய பயணம் இப்படி சிக்கலில் வந்துநிற்கிறது. சட்டச்சிக்கல்ஏற்படக்கூடாது என்பதற்காக முதல் படகில்செல்வதற்கு எடுத்த முயற்சியும்இவனுக்குப் பயன்தரவில்லை.
வாகனத்திற்கான உதிரிப்பாகத்தை வாங்கச் செல்லும் நந்தன்போலவோ, மகனைஅழைத்துவரச் செல்லும் ஆஸ்பத்திரிசாந்தன் போலவோ உத்தியோக அடையாளஅட்டையைப்பயன்படுத்தி முதல் படகில் செல்லும் பாக்கியமோ, தகுதியோஇவனிடம் ஏது. பெரியாஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்றுகூறிலாவகமாக அனுமதியைப் பெற்றுக்கொண்ட யுவானிஸ்போல சிங்களமும்அறிந்திருக்கவில்லை. நீதி மன்றத்தில்சரியான நேரத்தில் நின்றாக வேண்டும்என்ற தகவலைச் சரியாகஎடுத்துச் சொல்வதற்கேற்ற யாரையும்இவனுக்குதெரியவுமில்லை. வாடிக்கைக்கு வரும் ஒரு சிலபொலிஸாரோகதைத்துவிடவேண்டுமானால் நான்கு பொருள்தருமாறுபேரம்பேசினர். இப்படியிருக்க குறிப்பிட்ட தொகையினரைமட்டும்ஏற்றும் படகில் இவன் எப்படி ஏறிச்செல்லமுடியும்.
ஒரு பக்கம் கடலையும் மறுபக்கம் கற்பகிர்களையும் மாறி மாறிப்பாத்தவாறேஇன்றைய நாளின் ராசியின்மையைப் பற்றியோசித்தபடி இருந்தான், இவன். “மதன், எங்கப்பா போறாய்”என்று கொன்ஸ்ரைன் கேள்வி எழுப்பியவாறே மதனின்அருகில்வந்து அமர்ந்துகொண்டான்.
“ஊர்காவத்துறைக்குப் போவம் எண்டு வந்தன். முதல்லோஞ்சியில சனம் கூடஎண்டதால மிச்சப்பேரமறிச்சுப்போட்டாங்க, அதான் மற்ற வள்ளம்வெளிக்கிடுறவரைக்கும்…..” என்றான் மதன்.
“அது சரி” என்றபடி கொன்ஸ்ரையின் தன் கதையையும்நிறுத்திக்கொண்டான்.
கொன்ஸ்ரைனுக்கு மதனைப் பற்றி நன்றாகவே தெரியும். அவனது குலம், கோத்திரம் மட்டுமல்ல, குந்தியிருக்கும்இடத்தில் எதை யோசிப்பான் என்பதுவரைக்கும் தெரியும். இப்போது மதன் எங்கு பயணம் போகிறான்என்பதும்நன்றாகவே தெரியும். அதனால்தான் ஊர்காவற்றுறைக்குப்போவதாகச்சொன்னவனிடம் ஏன்? எதற்கு என்ற கேள்விகளைக்கேட்கவில்லை.
ஐந்து நாளைக்கு முன்னால் பத்திரிகையில் வெளிவராத சிறப்புச்செய்தியாக வலம்வந்தது மதன் பற்றிய செய்திதானே. பிறகுஎப்படி அவனிடமே விசாரிக்க மனம் உந்தும்.
பொஸிஸார் வலை விரித்து தேடுகிறார்கள் என்று தெரிந்தும் பயமின்றி சாராயம் கடத்தும் தைரியம் தன்னிடம் மட்டுமே உள்ளதாகப் பீத்திக்கொள்வான், மதன். தன்னைப் போல் பலர் இத்தொழிலைச் செய்தாலும் தானே இத்தொழிலில்சக்கரவர்த்தி என்று பெருமை கொள்வான். ஒருபோத்தலுக்கு அறுநூறு அல்லது எழுநூறு ரூபாய் என்றால் நாள்வருமானம் ஆறாயிரத்துக்கு மேலாக கிடைக்குமல்லவா. வருமானம் கிடைக்கின்றது என்றாலும் போத்தல்களைக்கொண்டு வந்து சேர்ப்பதில் படாதபாடு படவேண்டியிருந்தது. பிடிபட்டால் வேறுகதையின்றி வழக்குப் பதிந்து விடுவார்கள். இந்தச் சிக்கலைச்சமாளித்து வியாபாரம் செய்கிறவனுக்கு இந்த வருமானம் போதுமானது இல்லையென்றுதான் கூறவேண்டும். சாராயம் விற்பனை செய்கிறவர் என்று அறிந்தாலே பொலிஸார்அடிக்கடிவீட்டுப்பக்கம் வருவதும், வெருட்டி லஞ்சம் கேட்பதும், நாளுக்கு ஒருபோத்தல் தட்சனை கேட்பதும் பெருவழக்காக இருந்தன. இவற்றையெல்லாம் சமாளித்து லாபம் அரைவாசி நட்டம் அரைவாசி என்று வியாபாரம் செய்தாலும் இடையிடையே பொலிஸாரிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
கைநீட்டி வேண்டிய சாராயத்திற்குக்கூட விசுவாசமாக வேலைசெய்யாத பொலிஸ்காரர்களை மதன் வெறுத்தான். அரசாங்கம் வழங்குகின்ற மாதச்சம்பளத்திற்கு ஏற்ற வேலையை செய்யாவிட்டால் கூட தான் கொடுத்த போத்தல் சம்பளத்திற்கு ஏற்ற வேலையை செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்புவான். தனக்குப் பாதுகாப்பாய் இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கொள்வதாக வாக்குத் தந்துவிட்டு தன்னையேசாராயத்தோடு கைது செய்து வழக்கெழுதிய பொலிஸார் மீது அவனுக்கு மிகுந்த கோபம்.
ஊருக்குள் அடிக்கடி கொண்டாட்டங்கள் இடம்பெறுவதனால்வியாபாரம் நல்லவண்ணமே போய்க்கொண்டிருந்தது. விற்பனைக்கு ஏற்ற கொள்வனவைசெய்வதற்குப்போய்கையும்மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டான் அன்று. வலைமூட்டைக்குள் இருந்தவை, கைப்பைக்குள் இருந்தவை எனமொத்தம்பன்னிரெண்டு போத்தல்கள். மாவிலித்துறைமுகத்திலேயே பொலிஸார்மடக்கிப்பிடித்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். ஐந்துநாட்களில்ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு எனமுடிவைப் பெற்றுக்கொண்டு வீடுதிரும்பும்போது இரவுபன்னிரெண்டு மணியாகிவிட்டது. இந்தச் செய்தியைஅறியாதஆட்களில்லை. அதனால்தான் ஊர்காவற்றுறைக்குப்போவதற்குவந்ததாகக் கூறியவனிடம் ஏன் என்றுகொன்ஸ்ரையின்திரும்பக்கேட்கவில்லை.
ஏற்கனவே ஏழு மணிப் படகினைத் தவறவிட்டாகியது. இப்போதுஎட்டுமணியாகிவிட்டது. இனிப் புறப்பட்டால்கூட உரியநேரத்திற்கு ஊர்காவற்றுறைநீதிமன்றத்தை அடைவதுசாத்தியமா என்ற யோசனையிலும் அவனைஇன்னொருயோசனை வெகுவாக அமைதிப்படுத்தியது.
ஊரில் மதுக்கடை அமைப்பதற்கு தனியார் விடுதி ஒன்றிற்குஅனுமதிஅளிக்கப்பட்ட செய்தி ஊர் முழுவதும் பாரியபேசுபொருளாக இருந்தது. மதுபானசாலையோ சினிமாத்தியெட்டரோ இல்லாத ஊர்: எங்கள் ஊர் எனமார்தட்டியஊர்மக்கள் இந்த அனுமதியின் பின்னர்கிளர்ந்தெழுந்துபோராட்டங்களில் ஈடுபட்டனர். மதுபானசாலைஅமைப்பதற்குஎதிராக நடைபெறுகின்ற போராட்டங்களில்கலந்துகொண்டுஅதற்கெதிராகப் போராடுமாறு தனது மகனிடமும்மகளிடமும்கூறியிருந்தான். அவர்களும் போராட்டங்களில்கலந்துகொண்டு“நற்குடியை அழிக்கும் குடி நம் தீவிற்கு வேண்டாம்” எனஉரக்கக்கத்தி அப்பாவின் கட்டளைக்கு ஏற்றபடி நடப்பவர்கள்என்பதைநிரூபித்தனர். எனினும், அனுமதி அளிக்கப்பட்டவிடயத்தில் மாற்றம்ஏற்படவில்லை. ஊரை உறங்கவிடாமல்அனுதினம் பேசப்பட்ட இந்த விடயம்மதனின் உறக்கத்தையும்கலைத்தெறிந்தது. மதுபானசாலை ஒன்றுதிறக்கப்பட்டால்தன்னுடைய வியாபாரம் சரிந்துவிடும் என்ற பயம்அவனைஆட்கொண்டது. இருக்கின்ற பிரச்சினைகளோடு இந்தப்பிரச்சினைவேறுஅனுதினம் இவனை அதீத யோசனைக்குத்தள்ளுவதுமுண்டு.
கண்களை மூடி ஆழ்ந்த யோசனையில் இருந்தவனை நித்திரைகொண்டுவிட்டான்என்று நினைத்து “மதன் வள்ளம்வெளிக்கிடப்போகுதாம், எழும்பு தம்பி” என்றுசண்முகத்தார்தட்டிவிட்டு நடந்தார். சமுத்திரதேவா வள்ளம்தயார்நிலையில்இருந்தது. அருகில் குமுதிப்படகு நங்கூரமிடப்பட்டிருந்தது.
அனைவரது கண்களும் குமுதினிப் படகினை நோக்கியிருக்கசமுத்திரதேவாப்படகு தனது பயணத்தை ஆரம்பித்தது. வள்ளத்தில் இருப்பவர்கள் கேட்டு ரசிக்கும்வண்ணம் நாற்பதுவருடத்திற்கு முன்னர் நடைபெற்றசம்பவங்களைசுவார்ஸயமாகக் கூறினார், முருகேசு அண்ணன். குமுதினிஎன்றுஅந்தப் படகிற்கு பெயரிட்டது முன்னாள் பாராளுமன்றஉறுப்பினராகஇருந்த க.பொ.ரத்தினம் என்பதிலிருந்து அது, அவரின் மனைவியின் பெயர்என்பது வரைக்கும் எத்தனைகதைகள். இக்கதை சொல்கின்ற வாக்கிலேயேகிளிநொச்சி, முல்லைத்தீவு வாழ் சொந்தங்கள் பண்டையகதைகளைஇணைத்துவிட மறக்கவில்லை. நடைபெற்றகதைகளைநகைச்சுவையோடு சொல்வது ஊரவர்களுக்கே இருக்கும்விசேடபண்பு. இவை அனைத்தையும் கேட்டவனாய் மதனும்அமர்ந்திருந்தான்.
ஒவ்வொரு அலைமேவலுக்கும் கடல்நீர் படகுடன் மோதுண்டுவிளையாடவே மதன்உட்பட பலர் பகுதியளவில்நனைந்துவிட்டனர். வள்ளக்காரரிடம் ரூபாஇருநூறைக்கொடுத்த பின்னர் சில்லறையாக ரூபா நான்காயிரத்துஎண்ணூறுமதனின் கையில் இருந்தது. அதை சட்டைப்பையில்இட்டுக்கொண்டுஇறங்குதுறையில் சட்டெனக்குதித்துபேருந்தில் ஏறினான். ஒரு மணித்தியாலயபேருந்துப் பயணமுடிவில் ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தைஅடைந்தான்மதன்.
“அடேய் மதன். ரெண்டாவது லோஞ்சியில வந்தியோ. இங்கதான் நீயும்வெளிக்கிட்டனி எண்டு சொல்லி இருந்தாநேவிக்காரனோட கதைச்சு முதல்லோஞ்சியில வாறமாதிரிசெய்திருப்பேனேடா”
என்றபடி தனது வீரப்பிரதாபங்களோடு யுவானிஸ் முன்னுக்குவந்துநின்றான்.
“நான் உங்கள மாவிலியில காணல, கண்டிருந்தாசொல்லியிருப்பேன்” என்றபடிதன்வேலையைப் பார்க்கவிரும்பினான். அவனது கண்கள் சட்டத்தரணியைத்தேடும்பணியில் மும்முரமாக காணப்பட்டது.
ஒருவழியாக சட்டத்தரணியைக் கண்டுபிடித்துப்பேசும்போதுதான் அவனுக்குத்தெரிந்தது, கூடிய விரைவில்மீண்டும் ஒரு பயணம், அதே மக்களுடன், அதேபடகில்பயணிக்க வேண்டும் என்று.
வழக்குக்கு வராததற்கு ஒரு கட்டணம், சட்டத்தரணிக்கு ஒருகட்டணம், பயணச்செலவு என்று கூட்டிப்போட்டான் மனதில். அந்தப் பொஸிஸ்காரனுக்கு நான்குபோத்தல்கள்கொடுத்திருந்தால் இதனைவிட செலவு அதிகமாகவந்திருக்கும்என்று எண்ணியபடியே தனது தற்போதைய முடிவுக்கு வந்தான். இன்றைய பயணச்செலவை ஈடுசெய்து அவனது வியாபாரம்சீர்பெறவேண்டுமானால் கட்டாயம் இன்று நான்கு சாராயப்போத்தல்களை இறக்குமதிசெய்தே ஆகவேண்டுமாம். இதுதான்இப்போதைக்கு ம(னி)தனின் கணக்காகஇருந்தது.
யே.கிறித்துறாஜா,
4ம் வருட மாணவன்,
தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.