நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றை நிதமும் கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் பன்னாட்டு புகைத்தல் மற்றும் உயிர் கொல்லி போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்ட பரப்புரை வீதி ஓட்ட நிகழ்வும் கொடி தின ஆரம்ப நிகழ்வும் கடந்த 31 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எவ். சி. சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவு மருத்துவ கலாநிதி கஜேந்திரன், நல்லூர் பிரதேச செயலர் திருமதி. உ. யசோதா, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் சுதர்சன், ஆகியோரும் மதிப்புக்குரிய விருந்தினர்களாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் எந்திரி சாந்தாதேவி மாவட்ட விளையாட்டு அலுவலகர் விஜிதரன் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் முருகதாஸ் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், அலுவலகர்கள், மாவட்ட செயலக அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வீதி ஓட்டப் போட்டியில் 15 பிரதேச செயலகங்களின் 33 வைப்பகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 33 வீரர்கள் பங்குபற்றியதுடன் முதல் இடத்தை சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது. முதல் 5 இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.