இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன்(நவம்பர் 7) ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், யுத்தத்தினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல்களினால் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அவர்களில் 4,100 பேர் சிறுவர்களாவர்.
இந்தநிலையில், போர் நிறுத்தம் தொடர்பான உடனடி தீர்வுக்கு வருவது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் படையினர், அடுத்த 48 மணி நேரத்தில் உள்ளே புகுந்து தாக்கப் போவதாகவும், எஞ்சியிருக்கும் மக்கள் 4 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்த 8 லட்சம் பேர் தெற்கு காசா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காசாவிற்குள் இஸ்ரேல் படை புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து முன்னேறி வரும் இஸ்ரேல் படை தற்போது முக்கிய நகரமான காசா நகரை முற்றுகையிட்டுள்ளது. காசா நகரை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் படைகள், உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த தயாராகி உள்ளன.
தற்போது வடக்கு காசாவில் இன்னும் 3 லட்சம் பேர் தங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கடுமையான குண்டுவீச்சில சாலைகள், பாலங்கள் முற்றிலும் அழிந்து போக்குவரத்து வசதி இல்லாமல், எரிபொருள் இல்லாமல் அங்குள்ள மக்கள் தெற்கு நோக்கி செல்வது இயலாத காரியமாக உள்ளது.
இந்த நிலையில், காசா நகரில் இஸ்ரேல் படை நுழைந்து தாக்கினால் பொதுமக்கள் பலரும் குண்டுகளுக்கு இரையாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.