யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், நயினாதீவு மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 நவம்பர்) இடம்பெற்றது.
காலை 09 மணி முதல் பிற்பகல் 02.45 வரை நடைபெற்ற மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில், மேற்படி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், நயினாதீவு பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நயினாதீவில் செயற்படும் ஏனைய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தவர்கள் உட்பட 51 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் மருத்துவர் வைத்தியகலாநிதி மகேசு பிரதீபன், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ரவினதாஸ் உள்ளிட்ட இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்துகொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நயினாதீவில் இரத்ததான முகாம் நிகழ்வை நடத்துவதற்குத் திட்டமிட்டபோதிலும் கொரோனாத் தொற்று மற்றும் போக்குவரத்து நெருக்கடியினால் இரத்ததான முகாம் நிகழ்வை நடத்த முடியவில்லையென்பதுடன் நயினாதீவில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றமை மகிழ்ச்சி தருவதாகவும் நயினா தீவு மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிவனேஸ்வரன் பிரதீப் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான இரத்ததான முகாம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு ஆவலாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
இரத்ததான முகாம் நயினாதீவில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது