நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து நாளந்தம் மக்கள் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. மக்கள் போக்குவரத்துக்கக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுகின்றது
தனியார் படகுச் சேவைக்கான போக்குவரத்து நேர அட்டவணை மாதம் தோறும் போடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனைத்து இடங்களிலும் ஒட்டப்படுகின்றது. ஆயினும் அதற்கமைவாக படகுச் சேவைகள் சில சமயங்களில் இடம் பெறாமையால் மக்கள் துறைமுகங்களில் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக சனிக்கிழமைகளில் மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகுச் சேவை இடம் பெறுவதில்லை இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 16) காலையில் நெடுந்தீவிற்கு செல்வதற்காக செல்லும் பயனிகள் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய தேவையே காணப்படுகின்றது.
நேற்றைய தினம் நெடுந்தீவிற்கு வந்த குழுவினர் சிலர் மாலை படகு சேவையில்லாமையால் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தமையை காணமுடிந்தது. அரச சேவைகள் இயங்காத நாட்களில் படகு சேவைகள் இயங்குவதில்லை எனவும் அப்படியானால் அந்த நாட்களில் படகு அட்டவணை நேரத்தினை குறிப்பிடாது விட்டால் மக்கள் அதற்கு ஏற்ற விதத்தில் செயற்படலாம் எனவும் துறைமுகத்தில் நின்ற மக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஞாயிற்றுக் கிழமைகளில் குமுதினிப் படகு சேவையில் இல்லாமையால் காலையில் நெடுந்தீவில் இருந்து 100 மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த படகே மீண்டும் குறிக்ட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல காத்திருந்த பயணிகளை ஏற்றி செல்கின்றது.
இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்தி எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டி நிற்கின்றனர். அத்துடன் தற்போது வடதாரகை படகும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் குமுதினிப்படகினை சேவையில் ஈடுபடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் முயற்சிகள் மேற்கொள்வது நல்லது எனவும் தெரிவித்தனர்