புங்குடுதீவு பிரதேசத்தில் ஊரதீவு – கேரதீவு இணைப்பு வீதியானது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படவுள்ளது. இவ் வீதியின் ஒரு பகுதி ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் வடக்கு மாகாணசபையின் ஒதுக்கீட்டு நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது .
கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் கா. குகபாலன் , மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி முருகானந்தவேல் மற்றும் இறுபிட்டி மக்கள் சேவா சங்கத்தின் தலைவர் து.சுந்தரலிங்கம் ஆகியோர் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ரூபாய் 20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ் வீதியானது பூரணமாக திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அதனை முன்னிட்டு RDD தொழில்நுட்ப உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் ஊரதீவு , கேரதீவு மக்களின் ஒத்துழைப்புடன் கொளுத்தும் வெய்யிலின் மத்தியிலும் தொடர்ச்சியாக பத்து நாட்களாக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது .
அத்தோடு பெக்கோ இயந்திரம் ஊடாகவும் மேற்படி வீதியை சூழ்ந்திருந்த பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டன . சிரமதானத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு காலையும் மாலையும் சிற்றுண்டி வகைகள் ,தேநீர் வழங்கப்பட்டன .
அத்தோடு அவர்களுக்கு குடைகளும் , சுகாதாரப்பொருட்களும் வழங்கப்பட்டன .இதற்கான நிதியுதவியாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் 40000 ரூபாவினை தனது சொந்த நிதியில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மேற்படி பணிகளுக்காக சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளான நவரத்தினம் சிவானந்தன் ( சிவா ) மற்றும் திருமதி சுரேஷ் ஆனந்தி ஆகியோர் 120000 ரூபாவினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது