நெடுந்தீவு குறிக்காட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகானது திருத்த வேலைகள் முடிவுற்ற நிலையிலும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக கடலில் இறக்கப்படாமல் காத்துக் கிடக்கின்றது.
இதற்கான வேலைகள் யாவும் முடிவடைந்துள்ள நிலையிலும் படகினை பரிசோதித்து முடிக்கப்பட்ட வேலைகளை ஆய்வு செய்து அதற்கான கொடுப்பனவை வழங்கும் வகையிலான இறுதி அறிக்கைகள் தயாரிக்கப்படாமையினால் படகு கடலில் இறக்கப்படாமல் கட்டுமான துறையிலேயே தரித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினைச் சேர்ந்த அதிகாரிகள் அண்மையில் படகின் வேலையினை பார்வையிட்டு சென்றதாகவும் ஆனால் அதற்குரிய கொடுப்பனவுகள் சம்பந்தமாகவோ, இறுதி அளவீடுகள் சம்பந்தமாகவோ இதுவரைக்கும் எந்தவிதமான வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை என ஒப்ந்தகார்ர் தெரிவித்தார்.
படகினுள் நீர் கசியாதவாறு கலப்பத்து எனும் வேலை நிறைவடைந்து நீண்ட நாட்களாகியும் கடலில் இறக்கப்படாமையினால் கலப்பத்துக்கள் இளக்கமடைந்து அதனூடாக நீர் கசிவடையக் கூடிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் நீண்ட நாட்களாக வேலை முடிக்கப்பட்டு வெயிலிலே காய்ந்து இருப்பதால் கூடாரத்தின் பலகைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.
படகு திருத்தத்திற்கான அளவுகளை குறித்த அலுவலர்கள் மேற்கொண்டு அதற்குரிய அறிக்கைகளை முடிக்கின்ற போது படகை கடலில் இறக்கி விட முடியும் எனவும் கடலில் இறக்கி விட்டால் வெயிலில் காய்வதால் ஏற்படும் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும் எனவும் ஒப்பந்தகாரர் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகள் குமுதினிப் படகு வேலையில் அக்கறை எடுத்து அதனுடைய அளவுகளை முடித்து படகினை கடலில் இறக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.