கிளிநொச்சி புளியம்பொக்கணைப் பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (பெப்ரவரி 25) பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்றுள்ளது.
நெல் வீதியில் உலர விடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. புளியம்பொக்கணைப் பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கிப் பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து நெல் கொள்வனவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.
வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மக்கள் பயன்பாடுள்ள பிரதான வீதிகளில் நெல் உலர்த்தப்படுவதால் கிளிநொச்சியில் இந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது விபத்து மரணம் இதுவாகும்.