கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து இந்தமுறை 2 ஆயிரத்து 500 நபர்கள் வருவார்கள் என்று வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில் திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸை நேரில் சந்தித்து திருவிழாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே வேர்கோடு பங்குத் தந்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2 ஆயிரத்து 500 பேர் கச்சதீவு திருவிழாவுக்கு செல்ல இருக்கின்றனர். ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.
கச்சதீவு கடற்கரையில் பந்தல் மற்றும் உணவுகள் என்பவற்றை இந்தியத் தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து திருப்பயணிகள் நல்ல முறையில் விழாவில் கலந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவிழா அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை வியாழக்கிழமை வழங்கப்படும். விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
வெளிமாவட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்று ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் அரச அலுவலர்களும் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்- என்றார்.