க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட மாணவன் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம்(மே 31) நெல்லியடிப் பகுதியில் நடந்துள்ளது.
பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிகளுடன் வீதியில் மோட்டார்சைக்கிளுடன் நின்ற இளைஞர்கள் இருவர் சேட்டை விட்டதுடன், விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
பரீட்சை எழுதிவிட்டு அந்த வழியாக வந்த சக மாணவன் ஒருவர் அதைக் கண்ணுற்று மாணவிகளை அவர்களிடம் இருந்து பாதுகாக்க முயன்றுள்ளார்.
இளைஞர்கள் இருவரும் தலைக்கவசத்தால் மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 19 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, வீதியோர ரோமியோக்கள் தொடர்பாக பெற்றோர்களும், மக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
யாழ். நகர் பகுதி உட்படப் பல்வேறு இடங்களில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர் என்றும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அதேநேரம் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்களை பழக்கப்படுத்துவதற்கும் இது வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி மோட்டார் சைக்கிள்களுடன் அவ்விடங்களில் தேவையற்று நிற்கும் இளைஞர்கள் அச்சம் தரும் வகையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த விடயத்தில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.