பாசத்திற்குரிய என் தேசத்து உறவுகளே!
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தடம் மாறாத தமிழ்த்தேசியப்பாதையில் கடந்த பத்து ஆண்டுகளாக கொள்கைப்பற்றோடு நான் பயணித்து வந்திருக்கிறேன்.
எமது இருப்பைத் தக்க வைப்பதற்காகவும், இனத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்கள் ஆணையோடு நான் கடந்து வந்திருக்கிற பாதை மிகக் கடுமையானது.
இந்தக் கரடுமுரடான பயணத்தில் என்னை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட சதிகள், சவால்கள், சரிவுகள், வீழ்ச்சிகள், துரோகங்கள் என அத்தனைக்கும் எதிராய் என்னை நிழிர்ந்தெழச் செய்த என் மக்களாகிய நீங்கள், தொடர்ந்தும் எம் விடுதலைப் பயணத்தை பலத்தோடும், உரத்தோடும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை வழங்கியதற்காக என் மனப்பூர்வமான நன்றிகளையும், அன்பையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்கள் விடுதலைக்கான உரிமைக்குரலாய் நான் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்ற பெருவிருப்பின்பால் என்னை வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரினதும் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்த ஒருவனாய், எமது இனத்தினதும், எம் இனவிடுதலைக்காய் தம் இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களதும் சத்திய இலட்சியத்தின் வழி, தமிழ்த்தேசிய அரசியற்தளத்தை இனவிடுதலை நோக்கி, தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக பற்றுறுதி மிக்க தமிழ்த்தேசியப் பாதையில் என்றென்றைக்கும் தளராத துணிவோடு வழிநடாத்திச் செல்வேன் என உங்கள் வாக்குகளின் சாட்சியாக உறுதியெடுத்துக் கொள்கிறேன்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
இல.882, ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி, கிளிநொச்சி
0094 77 6913 244
shritharanmp@gmail.com
08/08/2020