வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் யாழ் குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல்!
வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் கொரோனா உச்ச நிலையில் மாபெரும் மனித பேரவலமாக மாறியுள்ளது.
தினசரி 4 இலட்சத்திற்கு குறையாத தொற்றாளர்களும், 4 ஆயிரத்திற்கு குறையாத பலியெடுப்புகளும் நிகழ்ந்து வருகிறது. மருத்துவத்துறையில் வளர்ச்சியடைந்த இந்தியாவே திணறும் நிலையை உலகம் கவலையுடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை-சுப்பர்மடத்தில் 100 கிலோ கேரள கஞ்சா மீட்பு! மினி பஸ் சாரதி கைது!
இந்நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலர், ஆபத்தின் வீரியத்தை விளங்காது இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளை இந்தியாவில் இருந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
யாழ்.ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று (மே-04) அதிகாலை 01.00 மணியளவில் 100 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ‘ரோசா’ ரக மினிபஸ் மற்றும் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இபோன்று, நேற்று (மே-03) பருத்தித்துறை தம்பசிட்டி வீடொன்றில் இருந்து 34 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேபோன்று நேற்று காலையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் 183 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கடலில் இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் இந்தியாவில் உள்ளவர்கள் மூலம் யாழ். குடாநாட்டிற்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயமேற்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படாத சந்தரப்பங்களில் தமது சட்டவிரோத கடல்பயணத்தை மறைத்து இயல்பாக சமூகத்தில் நடமாடித் திரிந்து வருகின்றனர்.
இதன் மூலம் யாழ் மாவட்ட கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட பிரதேசங்கள் மிகுந்த கொரோனாத் தொற்று அபாயமுள்ள பகுதிகளாக மாறிவருகிறது.
இவ் அபாய நிலையை கருத்தில் கொண்டு இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை குறித்த குறித்த கடற்றொழில் சங்கங்கங்கள் கூடுதல் கவனமெடுத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
இல்லையெனில் குறித்த விடயம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்களை வழங்கி எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என அருவி இணையம் சமூக அக்கறையுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.