வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு நேற்று(நவம்பர் 3 )காலை 8 மணி முதல் இன்று சனிக்கிழமை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது எனவும் மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமானது தமது முன்மொழிவுகளின் ஊடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்து, இலவச சுகாதார சேவைை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிர படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே! முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர்.
பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.
இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றுமுன்தினம் (நவம்பர் 2) முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் நேற்று அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு இடம்பெற்றுவருகிறது.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே ஒரு நாள் வேலை நிறுத்தமாக நேற்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.