யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வைத்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகிறது.
குறித்த சந்தைகளில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு அவர்களிடம் இந்த கழிவு அறவிடப்படுகிறது. எனவே, விவசாயிகள் இது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள்.
எனவே, பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து பொலிஸார் இதனை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இது போன்ற செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை பற்றி வட மாகாண ஆளுநர் கூறுகையில், இத்தகைய முரணான செயற்பாடுகளை பொலிஸாரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு பிரதேச செயலர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் பொலிஸாருக்கு வழங்கினால், அக்குற்றங்களை கட்டுப்படுத்தி, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு இலகுவாக இருக்கும் என்றார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு கொடுக்கும்போது இந்த கழிவு நடைமுறையை அமுல்படுத்தக்கூடாது என்கிற நிபந்தனையையும் பின்பற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.