மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார்.
அவர்களுக்கு உடந்தையாக தெல்லிப்பழையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கலாசார சீரழிவு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்திருந்தார்.
சந்தேக நபர்கள் நால்வரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அதன்போதே நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சுதுமலையைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுமியை பணத்துக்காக கலாசார சீரழிவில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.