நாட்டில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் முசலி பிரதேச செயலாளர் மக்களுக்கு உரிய பணியை முன்னெடுக்கவில்லை என்றும்,இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்த கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முசலி பிரதேச அமைப்புக்கள் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது.
எனினும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பங்குளம்,4ம் கட்டை ,மருதமடு,பிச்சைவானிபநெடுங்குளம் போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது.
குறித்த கிராமங்களுக்கு தேவையான உடனடி அடிப்படை தேவைகளை வழங்குவதில் முசலி பிரதேச செயலாளர் அசமந்தமாக செயல் பட்டமை தொடர்பில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இடம் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக வேப்பங்குளம் கிராம பள்ளி வாயில் நிர்வாகம் ,கிராம அபிவிருத்தி அமைப்பு ,விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு என 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
இதேவேளை குறித்த கிராமத்தின் கிராம அலுவலர் அனர்த்தம் ஏற்பட்ட தினத்தில் இருந்து இரவு பகலாக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் குறித்த கிராம சேவகருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்து அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தியதுடன் மீண்டும் கிராம சேவகராக அவரையே தமது கிராமத்திற்கு கடமைக்கு அமர்த்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.

