முல்லைத்தீவு – ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் கல்வி வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.
1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையினை நிலையாட்டியிருந்ததுடன் அந்த பாடசாலையின் பெயரினையும் வெளியுலகிற்கு எடுத்துரைக்க காரணகர்த்தாவாக விளங்கியுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சு.யதிப்சன் என்ற குறித்த மாணவனுக்கு கௌரவிப்பு நிகழ்வானது பாடசாலை அதிபர் தணிகாசலத்தின் தலைமையில் நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சந்தன மாலையிட்டு குத்துவிளக்கேற்றி விருந்தினர்களோடு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவன் காவடியாட்டத்துடன் வரவேற்று நிகழ்வில் மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர்கள், அப்பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி அலுவலகர் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அத்துடன் மாணவனை சித்தியடைய வைத்தமைக்காக அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் மாணவனின் பெற்றோர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.