வீதி விதிமீறல்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த தவறினால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு (ஒக்டோபர் 15 வரை) 17,965 வீதி விபத்துகளில் 1,790 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பெலிஸார் தெரிவித்துள்ளனர். 4,000 இற்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்துகளில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் (562), பாதசாரிகள் (556), பயணிகள் (204) மற்றும் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் (167) ஆகியோர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துகளில் 126 சாரதிகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள், இரட்டைப் பயண வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் தனியார் பேருந்துகள் போன்ற வாகனங்கள் விபத்துக்குள்ளான வாகனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
இந்த ஆண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற 38 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர். சமீபத்தில் இடம்பெற்ற விபத்துகளில் பொலிஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொழும்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி கார் மோதியதில் உயிரிழந்தார்.
கொழும்பு சுதந்திர சதுக்கம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதேபோல், கலேவெலயில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 24 வயதுடைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.
அநுராதபுரம் – தலாவ பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த 10 வயது சிறுமி, அவரது தாய் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பாரவூர்தியில் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த வாரம், கல்பிட்டியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது தந்தை காயமடைந்தார். பிரபல பாடகர் ஒருவரும் சமீபத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி, நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளில் மோதியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.