புரேவி புயலால் அடித்துச்செல்லப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று தலைமன்னார் பியர் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை (டிசம்பர் 05 )மாலை மீனவர்களால் மீட்கப்பட்டது.
அவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், OFRP – A – 6204 JAF என்ற பதிவிலக்க முடைய குறித்த படகில் அமுதவிஜி ஸ்ரெபானி’ எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவிலக்கத்தின் அடிப்படையில், அந்தப் படகின் உரிமையாளர் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்தே குறித்த படகு நெடுந்தீவை சேர்ந்த மீனவருக்கு சொந்தமானது என்றும், அந்தப் படகு காணாமல் போனது குறித்து அவர் முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
மன்னார் கரையோர இராணுவ சோதனைச் சாவடியில் பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ள படகு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்தப் படகை உரிமையாளரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
(நன்றி ஈழநாடு)