யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு மற்றும் தைப்பொங்கள் நிகழ்வு என்பற்றுக்கான முன்னாய்த்தக் கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 10) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ( காணி) சுப்பிரமணியம் முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் எல். இளங்கோவனும் கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் 15ஆம் திகதி நல்லூர் சிவன் ஆலயத்தில் நடாத்த தீர்மானித்துள்ள தைப்பொங்கல் நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அன்று பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் ஆலய உட்புறத்தில் பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ந்து இசை ,நாதஸ்வர, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உரைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் நிகழ்வு நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் கலாசாரத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடன் ஒழுங்கமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மண்டபத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நிகழ்நிலை ஊடாக ஏனைய மாவட்ட திணைக்கள தலைவர்கள், பிரதிநிகள் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலக அதிகாரிகள், ஆளுநர் செயலக அதிகாரிகள், இராணுவஅதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.