நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் கடந்த 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை வட மத்தி கிராமசேவகர் பிரிவில் (J/389) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதோடு, பருத்தித்துறை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அவர்கள் ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, முன்னாள் சபாநாயகர் கௌரவ கருஜயசூரிய அவர்களின் வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சி அவர்களின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன.
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர்அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் உரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தரோடை கிராமசேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும்
ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் கீழ், பங்குபற்றல் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 27 முன்மாதிரி ஜனசபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, வடமாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ரவீந்திர டீ சில்வா, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.