தென்னை அபிவிருத்தி சபையால் அறிமுகப்படுத்தப்படுகின்ற உயர்ரக (ஹைபிறிட்) 500 தென்னம் பிள்ளைகள் கடந்த 23ம் திகதி (பெப்ரவரி 23) நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
500 தென்னம் பிள்ளைகளை நெடுந்தீவு மண்ணின் மைந்தன் கனடா தேசத்தில் வசித்து வருபவருமான திரு.கண்ணன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவர் கடந்த காலங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கு தென்னம் பிள்ளைகளுடன் பயன்தரு மரங்களினை அன்பளிப்பாக வழங்கியருந்தார். கடந்த வருடம் நெடுந்தீவிற்கு வருகை தந்து நெடுந்தீவிலேயே மரக்கன்றுகளை வளர்த்து மக்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர் சூழல் மீது அதிக பற்றுள்ளவர்.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ.சி.சத்தியசோதி அவர்கள் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மதிப்பிற்குரிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள்,தெங்கு பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு. வைகுந்தன், ஏற்றுமதியாளர் திரு.S.கரிகரன், நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் திரு.வ.சுபாஸன், நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி காரியாலய முகாமையாளர் திரு.ராஜ்பவன், தெங்கு பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தெங்கு அபிவிருத்தி சபையின் பிராந்திய உத்தியோகத்தா்கள் தென்னம் பிள்ளையின் பராமாிப்பு பசளையிடல் நீா்ப்பாசனம், 03 வருடங்களின் பின்னா் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போன்ற சகல விடயங்களையும், தெளிவு படுத்தியதுடன் பெற்றுச் செல்லும் பயனாளிகள் பிள்ளையைப் போல் தென்னம் பிள்ளையினையும் சாியாக பராமாிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினா்.
சாியான முறையில் நடப்பட்டு சாியாக பராமாிக்கப்படும் பட்சத்தில் இவ் உயா்ரக தென்னம் பிள்ளைகளின் ஊடாக 03வருடங்களில் பயனைப் பெற்றுக் கொள்வதுடன் தொடா்ச்சியாக 20 – 25 வருடங்கள் பயன் பெறக்கூடிய நிலமை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.