தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்நடிகர் விவேக்கின் நினைவாகச்
சுற்றுச்சூழல் தினத்தில் மரநடுகை
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான யூன் 5ஆம் திகதி நடிகர் விவேக்கின் நினைவாக ‘நடிகர் விவேக்கின் பணியில் நமது பங்கு, நாமும் நடுவோம் ஒரு மரம்’ என்ற மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியினை இம்முறை இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆண்டுக்குரிய சூழல் தினத்தின் இயற்கைக்குத் திரும்புதல் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இணையவழி உரையரங்கின் நிறைவில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் சூம் செயலியின் ஊடாக உரையரங்கில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் தத்தமது வீடுகளில் மரநடுகையில் ஈடுபட்டனர்.
நடிகர் விவேக் திரைத்துறையில் தனக்குக் கிடைத்த வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கட்டாந்தரையைப் பசுமையாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்துல் கலாம் அவர்களின் பணிப்புரையைச் சிரமேற்கொண்டு ஒருகோடி மரங்களை நடுகை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் இதுவரையில் முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்துள்ளார்.
அவர் இறந்தபோது அவரின் ரசிகர்கள் மரக்கன்றுகளை நாட்டியே அவருக்குப் பசுமை அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர். இலங்கையிலுள்ள அவரது ரசிகர்கள் எம்மிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகச் சூழல் தினத்தில் நடிகர் விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் என்ற திட்டத்தை இன்பத்தமிழ் வானொலியின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளோம் .
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் வடக்கில் வடமாகாண மரநடுகை மாதத்தைக் கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. ஆனால், இது ஒரு தேசிய மரநடுகை நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. தொடக்க நாள் அன்று யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அல்லாமல் வவுனியா, மன்னார், மலையகம், கொழும்பு என்று இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மரங்களை நாட்டிப் படங்களை எமக்கு உடனுக்குடனேயே அனுப்பி வைத்துள்ளனர்.
கொரோனா முடக்கம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இடம்பெற்றதால் இன்னும் ஒருமாதத்துக்கு இதனை நீடிக்க முடிவு செய்துள்ளோம். இக்காலப் பகுதியில் மரக்கன்றுகளை நடுகை செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்திடம் இருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் .
பொ. ஐங்கரநேசன்
WhatsApp 0775565460