இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படை நேற்றுமுன்தினம்(செப்டெம்பர் 13) கைதுசெய்திருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 இழுவை படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இது போன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.