இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (மார்ச் 31) இடம்பெற்றிருந்தது.
இதன்போது சைவ சமயத்தைக் பேணிப் பாதுகாப்பதற்கான பிரதான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுதல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்களினால் மேற்கொள்ளும் மதமாற்றத்தை தடுத்தல், சிவபூமியாக இலங்கையினை மாற்றும் நடவடிக்கை தொடர்பான அருட்தந்தை சக்திவேலின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடுதல், யாழ் மாவட்டத்தில் மூடப்படும் இந்து பாடசாலைகளை இந்து அமைப்புக்களிடம் வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் ஆதீன முதல்வர்கள், இந்து சமையத் தலைவர்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த பிரதிநிதிகள் போருக்குப் பின்னர் மதமாற்றத்துக்கு உள்ளானவர்களை மீண்டும் தாய் மதம் திரும்ப அழைத்தல், கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படும் மதமாற்றத்தினைத் தடுத்தல், பெளத்த தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான தீர்வுகளைப் பெறுதல், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அழிக்கப்பட்ட சமய சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட விடயங்களைக் கலந்துரையாடியருந்தனர்.
இதேவேளை இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பட்டியலிடப்பட்டு குறித்த அறிக்கை இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.