கற்க வேண்டிய வயதினில் கல்வியைப் பெற்றுக் கொள்ள முயலாமல் அதனை தவறவிட்டால்
உங்களது எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கப்படும். மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்கால இலட்சியக் கனவு இருக்கும் என்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டி கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து ஆற்றிய தனது உரையில் பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிலருக்கு வைத்தியர் ஆக வேண்டும் என்ற இலட்சியமும் சிலருக்கு பொறியியலாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமும், சிலருக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணமும் சிலருக்கு நல்ல தொழில்துறை அதிகாரியாக வர வேண்டிய எண்ணமும் இருக்கும்.
இவ்வாறான எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருவது நீங்கள் கல்வியில் காட்டும் அக்கறையும் முயற்சியுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு பரீட்சையினை நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களின் வெற்றியும் தங்கியுள்ளது.
உங்களது பரீட்சைக்கான தயார்படுத்தலில் நீங்கள் தேடும் வழிமுறைகளின் வெற்றியே உங்களின் வெற்றியாக அமையும். சிறந்த முறையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பரீட்சையினை வெற்றிகரமாக எரிர்கொள்கின்றான். நன்றாக கல்வி கற்காத மாணவன் பரீட்சைக்கு செல்வதையே ஒரு பெரும் சுமையாக எண்ணி அச்சத்துடன் செல்கிறான்.
கல்வியின் மீது நீங்கள் காட்டும் அக்கறையும் விருப்பும் உங்கள் எதிர்காலத்தினை ஒளிமயமாக்கும் என்பதால் மாணவர்களாகிய நீங்கள் பிற சிந்தனைகளுக்கு இடம் தராமல் கல்வியின் மீது மட்டும் நாட்டத்தினை செலுத்தி உங்கள் இலட்சியங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் கூறினார்
இவ் விசேட கருத்தரங்கில் வளவார்களாக கலந்து கொண்ட திரு.N.சசிகுமார் மற்றும் திரு இ.சுபேந்திரன் ஆகிய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயனுள்ள பல வழிகாட்டல்களை வழங்கினார்கள்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய மாத வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களின் நன்மை கருதி இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது்
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பயனுள்ள பல கற்றல் வழிகாட்ல் மற்றும் மாதிரி வினாக்களும் அதற்கான விடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.