கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான உத்தேச தனியார் உறுப்புரிமை சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணானது என்றும், அது அதி சிறப்புப் பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சட்டமாஅதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டவரைவின் 2 ஆவது சரத்து அரசமைப்பின் 3, 4, 12(1) மற்றும் 14(1) ஆகிய பிரிவுகளுக்கு முரணானது.
முன்மொழியப்பட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நெருக்கடியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரம் காலவரையறையற்ற காலத்துக்கு மீண்டும் கூட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் உள்ளாட்சி அமைப்புக்களின் பதவிக் காலத்தை நீடித்துத் தேர்தலைத் தாமதப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தங்கள் பதவிக் கால வரம்பை மீறிய உள்ளாட்சி அமைப்புக்களின் உறுப்பினர் ஜனநாயக ரீதியில் பெறப்பட்ட ஆணையின்றி காலவரையறையின்றிப் பதவியில் தொடரலாம்.
மக்களின் உரிமை அத்துடன் வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் நிற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். இந்தச் சூழலில் எஸ்சி (எஸ்டி) எண்கள் 20-32 2017 இல் உயர் நீதிமன்றத்தின் 20ஆவது அரசமைப்பு சட்டத்திருத்ததுக்கு உங்கள் கவனம் செலுத்தப்படுகின்றது என்று சட்டமா அதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்துக் கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபைக் கட்டளைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபைக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.