2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று (20 ஏப்ரவரி) முதல் ஆரம்பமாகுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டியம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இவ்வாறு ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பாடங்களுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள், விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதனிடையே, நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை மறுதினம்(22 ஏப்ரவரி) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.அண்மையில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.