ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலகு ரயில் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இலகு ரயில் திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2020ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதிக பராமரிப்புச்செலவு, சுற்றாடல் மாசு போன்ற காரணங்களைக் காட்டி இந்த திட்டம் ஒருதலைப்பட்சமாக அப்போது ஆட்சியில் இருந்த கோத்தாபய ராஜப்கச அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டது.
சீனாவின் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது அந்தத் திட்டத்தை மீள நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மலபேயிலிருந்து கொழும்பு கோட்டை வரையான 16 புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக 17 கிலோமீற்றர் நீளமுள்ள மேம்பால ரயில் சேவையாக இது அமையவுள்ளது.
25 புகையிரதங்கள் இந்த சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொன்றும் 800 பயணிகள் பிராயணம் செய்யக்கூடிய வசதியைக்கொண்டிருக்கும்.
ஒவ்வொரு ரயிலிலும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்துக்கென ஆயிரத்து 800 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கியுள்ளது.